பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு

0
11

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் தலை சாலையில் கிடந்தது’ என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதப் பிரச்சினையைச் சமாளிப்பது குறித்து எந்த உடன்பாடும் எட்டத் தவறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி பார்வையிட்டார். மேலும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here