பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல். இவர் இப்போது ‘ஜாட்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதில் ரெஜினா காஸண்ட்ரா, ரன்தீப் ஹுடா, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். ‘புஷ்பா’வைத் தயாரித்த தெலுங்கு திரைப்பட நிறுவனமான மைத்ரிமூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
ஏப்.10-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் நடிகர் சன்னி தியோல் பேசும்போது தென்னிந்திய தயாரிப்பாளர்களைப் பாராட்டினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “சினிமாவை எவ்வளவு பிரியத்துடன் தயாரிக்க வேண்டும் என்பதை தென்னிந்தியத் தயாரிப்பாளர்களிடம் இருந்து இந்தி தயாரிப்பாளர்கள், கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் இந்தி சினிமாவை தயாரிக்க வேண்டும். பிறகு எப்படி சினிமா தயாரிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தென்னிந்திய சினிமாவில் கதைதான் ஹீரோ. ‘ஜாட்’ படக்குழுவுடன் பணியாற்றியதை மிகவும் ரசித்தேன். அவர்களுடன் இன்னொரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னேன். ஒருவேளை நான் தென்னிந்தியாவில் கூட ‘செட்டில்’ ஆகலாம். இந்தி இயக்குநர்கள் மேற்கத்திய தாக்கத்தில் தங்களது வேர்களை மறந்துவிடுகிறார்கள். நமது சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.
தென்னிந்திய சினிமா அந்த விஷயங்களைத் தக்கவைத்துக் கொள்கிறது. அதனால்தான் அவர்கள் உருவாக்கும் படங்கள் இந்தியா முழுவதும் வரவேற்பை பெறுகின்றன. இந்த விஷயத்தை இந்தி சினிமாவும் பின்பற்றி, நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டும்” என்றார்.














