பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 10 மாநகராட்சிகள், 51 நகராட்சி மன்றங்கள் மற்றும் 248 நகராட்சிகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாக நடைபெற்றன. செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு கட்ட தேர்தலிலும் மொத்தம் 74.05% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.
இவற்றில், பாஜகவுக்கு 4,179 மற்றும் காங்கிரஸுக்கு 3,613 வார்டுகள் கிடைத்துள்ளன. ஜெய்பூர், கோட்டா, உதய்பூர் மற்றும் பில்வாராவில் பாஜகவினர் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸுக்கு அஜ்மீர், பிக்கானேர் மற்றும் பாலியில் அதிக வார்டுகள் கிடைத்துள்ளன. சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினருக்கு 2,436 வார்டுகளில் வெற்றி கிடைத்துள்ளது. உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 19 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக முதல்வர் பஜன்லால் தலைமையிலான அரசின் 20 மாத கால ஆட்சிக்கான சோதனையாக இந்தத் தேர்தல் கருதப்பட்டது. இதன் முடிவுகளில், முதல்வர் பஜன்லால் அரசு வெற்றி பெற்றுள்ளதையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. பாஜகவின் பல முக்கியத் தலைவர்களால் தங்கள் வார்டுகளில் வெற்றி பெற முடியவில்லை.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் வார்டில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் கோட்டையாகக் கருதப்படும் ஜலாவாரில் பாஜகவால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. முதல்வர் பஜன்லால் சர்மாவின் மாவட்டமான பரத்பூர் மாநகராட்சியிலும் பாஜகவால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. பாஜக மாநிலத் தலைவர் மதன் ரத்தோடின் கோட்டையான பாலியிலும் பாஜக தோல்வியைச் சந்தித்தது.
இதேபோல், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் வசிக்கும் வார்டில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. கெலாட் வசிக்கும் வார்டில் பாஜக வெற்றி பெற்றது ஒரு முக்கியத் திருப்பமாகும். காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சரான சச்சின் பைலட் வசிக்கும் ஜெய்ப்பூர் மாநகராட்சியின் 97-வது வார்டிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், பைலட்டின் தொகுதியான டோங்கில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளது.
ஜென் இசட் ஆதிக்கம்
இம்முறை தேர்தலில் 21-22 வயதுள்ள ஜென் இசட் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஜெய்ப்பூர் முதல் அல்வார் வரை பல்வேறு வார்டுகளில் இளம் வயதினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவின் 21 வயது வேட்பாளர் நேஹா சர்மா, அல்வரின் தானாகளி வார்டில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸின் 22 வயது பைஜ் அகமது ஜெய்பூர் 71-வது வார்டில் பெற்றி பெற்றுள்ளார்.
