காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மத்திய அரசு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியா வெற்றி பெற்றதை நாடு முழுவதும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் முப்படைகளின் வீரதீர செயல்களை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்ட பா. ஜனதா சார்பில் தேசிய ஒற்றுமை பேரணி நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
பேரணிக்கு எம். ஆர். காந்தி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது சற்குண வீதியில் தொடங்கி செட்டிகுளம் சந்திப்பு, பொதுப்பணித்துறை சாலை வழியாக வேப்பமூடு பூங்கா முன்பு நிறைவு பெற்றது. பேரணியில் மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.