உத்தர பிரதேசத்தில் பாஜக பிரமுகர் குல்பம் சிங் யாதவை, மர்ம நபர்கள் 3 பேர் விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலிகர் அருகேயுள்ள தப்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் குல்பம் சிங் யாதவ் (60). பாஜக பிரமுகரான இவர் , மேற்கு உத்தர பிரதேசத்தின் பாஜக மண்டல துணைத் தலைவராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு குன்னார் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் இவர் அப்போதைய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை எதிர்த்து போட்டியிட்டவர். பஜக கட்சியில் இவர் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் தனது தப்தாரா கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் நேற்று முன்தினம் அமர்ந்திருந்தார்.
அப்போது 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் குல்பம் சிங் யாதவிடம் கட்சி தொண்டர்கள் போல் அறிமுகம் செய்து நலம் விசாரித்தனர். அவர்கள் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு குல்பம் சிங் யாதவுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் குல்பம் சிங் யாதவின் வயிற்றில் ஊசி ஒன்றை செலுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்றபின் வலியால் துடித்த குல்பம் சிங் யாதவ் மயங்கி விழுந்தார். இதனால் குல்பம் சிங் யாதவின் மகன், தனது தந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குல்பம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை அலிகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குல்பம் சிங் யாதவ் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.