பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாஜக வழக்கறிஞரான ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கரோனா ஊரடங்கின்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சி்க்கு வந்ததும் ரொக்கப்பணம் ஏதுமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரொக்கப்பணம் ஏதுமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏழை, எளிய விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: இதற்கிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்துடன் வழக்கமாக வழங்கப்படும் ரூ.1000 ரொக்கத் தொகையும் சேர்த்து அரசு வழங்க முன்வரவேண்டும்.
அதேபோல் திமுக ஆட்சியில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி வரும் 6-ம் தேதி (திங்கட்கிழமை) தேமுதிக சார்பில் அனைத்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.