Home உலக செய்திகள் ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ் – எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்!

ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ் – எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்!

0

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கிய மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பதாகக் காட்டப்படும் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் உள்ளிட்ட பலரில் பில்கேட்ஸும் ஒருவராக உள்ளார்.

எப்ஸ்டீன் கோப்புகளில் மின்னஞ்சல்கள், நேர்காணல் டிரான்ஸ்கிரிப்டுகள், புகைப்படங்கள், அழைப்பு பதிவுகள் போன்ற பல்லாயிரக்கணக்கான ஆவணங்களில் சில பெயர்கள் மறைக்கப்பட்டு, கடந்த மாதம் அமெரிக்க நீதித்துறையால் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

இந்தச் சூழலில், பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் இப்போது பொது மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் பகிர்ந்து கொண்ட அறிக்கையில், ‘சமீபத்திய டவுன் ஹால் கூட்டத்தின்போது பில் கேட்ஸ் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்றார். அங்கு அவர் எப்ஸ்டீனுடனான தனது உறவுகளைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்தார்.

டவுன் ஹாலில், எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷ்ய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக கேட்ஸ் ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

எப்ஸ்டீனுடன் நேரத்தை செலவிட்டதும், மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடன் சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் ஒரு பெரிய தவறு என்று கேட்ஸ் ஊழியர்களிடம் கூறினார். இதனால் நிறுவனத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார், “நான் செய்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மற்றவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

அதேபோல, “நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. சட்டவிரோதமாக எதையும் நான் பார்த்ததில்லை. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர்களுடன், அவரைச் சுற்றியுள்ள பெண்களுடன் நான் எந்த நேரத்தையும் செலவிடவில்லை” என்று ஊழியர்களிடம் பில் கேட்ஸ் கூறினார்.

2014 வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், எப்ஸ்டீனுடன் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவருடன் நேரத்தைச் செலவிட்டதாகவும் பில் கேட்ஸ் கூறினார். மேலும், “நான் ஒருபோதும் எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதில்லை” என்பதையும் உறுதிப்படுத்தினார். இது நிச்சயமாக நம் அறக்கட்டளையின் மதிப்புகள் மற்றும் அறக்கட்டளையின் இலக்குகளுக்கு எதிரானது என்றும் கேட்ஸ் கூறினார்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீனுக்கு இடையிலான பல சந்திப்புகளை விவரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கேட்ஸைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. ஆவணங்களில் பில் கேட்ஸ், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version