Home உலக செய்திகள் வங்கதேச தேர்தல் முடிவுகள் | ‘இந்தியாவுக்கு நன்றி… இரு தரப்பு உறவு வலுப்படும்’ – பிஎன்பி...

வங்கதேச தேர்தல் முடிவுகள் | ‘இந்தியாவுக்கு நன்றி… இரு தரப்பு உறவு வலுப்படும்’ – பிஎன்பி நம்பிக்கை

0

வங்கதேச தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக வங்கதேச தேசியவாத கட்சி தெரிவித்துள்ளது.

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎன்பி 181 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஜமாத் இ இஸ்லாமி 61 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், டாக்காவில் உள்ள பிஎன்பி தலைமையகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியை நோக்கி மக்களை அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஜனநாயக, முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய வாங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘இந்தியாவும் வங்கதேசமும் வரலாறு, மொழி, கலச்சாரம் மற்றும் பல பொதுவான பண்புகளில் ஆழமாக வேரூன்றிய பிணைப்புகளை பகிர்ந்து கொள்கின்றன. நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்காக, ஜனநாயகப்பூர்வமான, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசம், அனைத்து இந்தியர்களாலும் ஆதரிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு வங்கதேச தேசிய கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் 2026 தேர்தலுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் கான், ‘‘எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மானை வாழ்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஒரு ஜனநாயக நாடு, மக்களின் தீர்ப்பை அங்கீகரித்திருப்பது மிகவும் நல்லது. நரேந்திர மோடி இதைச் செய்துள்ளார். அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version