இனிவரும் காலங்களில் பள்ளிகளின் அனுமதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, பிறந்தநாள் விழாக்கள் அல்லது அரசு சாராத எந்த வொரு நிகழ்ச்சியும் பள்ளிகளில் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறிவுப்பண்ணைகள் கல்விக்கூடங்கள் என்பவை காட்சிக் கூடங்கள் அல்ல; அதேபோல் பள்ளிகள் அரசியல் மேடைகளும் அல்ல. அவை அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப்பண்ணைகள்.
எனவே, இனிவரும் காலங்களில் பள்ளிகளின் அனுமதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, பிறந்தநாள் விழாக்கள் அல்லது அரசு சாராத எந்தவொரு நிகழ்ச்சியும் பள்ளிகளில் நடத்தப்படக் கூடாது.
அரசியல் கட்சியினரோ தனியார் அமைப்பினரோ மாணவர்களை நேரடியாகச் சந்திக்க அனுமதி இல்லை. மாணவர்கள் வகுப்பறையில் கற்கும் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரம்.
அந்த நேரத்தில் எந்த காரணத்துக்காகவும் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும், மாணவர்களின் கவனமும் சிதையாமல் இருப்பதை உறுதி செய்வது நமது முதன்மை பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்கள் நடத்தும் இடமாக இல்லாமல், அறிவார்ந்த சிந்தனைகள் வளரும் இடமாக மாற வேண்டும். மேலும், பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு முறை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
