தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சிப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லாமல் அதே கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யாமல், தயக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தமிழகத்துக்கான தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்துக்கு பலமுறை வருகை தந்து மூத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் சென்னை வந்த பைஜெயந்த் பாண்டா, பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இக்கூட்டத்தில், தேர்தல் பிரச்சார வியூகம், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் குறித்தும், தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார். மேலும், சென்னையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து, பாஜக கூட்டணியை வலுப்படுத்த, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
            













