ஆசிய விளையாட்டில் பாட்மிண்டன் விளையாட்டுக்கான போட்டி அட்டவணை சரியாக தயாரிக்கப்படவில்லை என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து விமர்சனம் செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் கால் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி கண்டு வெளியேறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் விளையாட்டுக்கான அட்டவணை சரியான முறையில் தயாரிக்கப்படவில்லை. ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இடையே வீரர், வீராங்கனைகளுக்கு போதிய ஓய்வு நேரம் அளிக்கப்படவில்லை.
கடந்த 24 மணி நேர இடைவெளியில் நான் 3 ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டிய நிலை இருந்தது. நேற்று (செப்டம்பர் 26) மட்டும் நான் 2 ஒற்றையர் போட்டிகளில் விளையாடினேன்.
ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இடையே சரியான ஓய்வு நேரம் இருப்பது அவசியம். அப்போதுதான் உடல் மற்றும் மன ரீதியாக வீரர், வீராங்கனைகள் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதற்கு வசதியாக இருக்கும்.
இந்தப் போட்டிக்கு மனதளவில் தயாராவதை விட, உடல் ரீதியாக மீண்டு வருவது அவசியம். உடலுக்கு ஓய்வு தேவை. நீங்கள் நன்றாகச் செயல்படுவதாக நினைத்தாலும், உடல் ரீதியாக உங்களால் களத்தில் முழுமையான செயல்பாட்டைத் தரவோ அல்லது விளையாடவோ முடியாமல் போகலாம். போட்டியின்போது நீண்ட நேரம் நீடிக்கும் பந்துகளை திருப்பி அனுப்பும்போது (ரேலி) கால்கள் ஒத்துழைக்காமல் போகும் நிலை வரலாம்.
நான் பங்கேற்ற கால் இறுதிப் போட்டியானது, ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல ஆட்டம் என்றே கருதுகிறேன். ஆனால் போட்டி அட்டவணை இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
