இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவும், மற்றொரு மூத்த பேட்ஸ்மேனான விராட் கோலியும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளனர். இந்நிலையில் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும், வரவிருக்கும் தொடர் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆரோன் பின்ச் கூறியதாவது:
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடர் மிக சிறந்ததாக இருக்கும். விராட் கோலி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த திறனை வெளிப்படுத்துவார் என்று நினைக்கிறேன். இரு அணிகள் இடையிலான போட்டியை நீங்கள் காகிதத்தில் பார்க்கும் போது எப்போதும் ஒரு சிறந்த போராகவே இருக்கும். ஏனெனில் இரு அணிகளும் பலமானது. ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என வெல்லும்.
ஷுப்மன் கில் ஏற்கனவே டி20 கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்து விட்டார், எனவே ஒருநாள் போட்டியில் எதுவும் வித்தியாசமாக எதுவும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர், சிறந்த வீரர். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவர், தலைமை தாங்கிய விதம் இந்திய அணியை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் வழிநடத்த பெரிய வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருப்பது ஷுப்மன் கில்லுக்கு பலம் சேர்க்கும். ஏனென்றால் அணி எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது குறித்த கருத்துக்களை களத்திலும் வெளியேயும் அவர்கள் கொடுக்க முடியும். ஏனென்றால் அவர்கள் நீண்ட காலமாக அணியின் மிகப்பெரிய பகுதியாக இருந்து வருகின்றனர். இவ்வாறு ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.