முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 181 ரன்னுக்கு ஆல் அவுட்: இந்திய பவுலர்கள் அசத்தல்

0
33

இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியில் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜன.3) சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் முதல் செஷனில் லபுஷேன் 2, சாம் கான்ஸ்டாஸ் 23, டிராவிஸ் ஹெட் 4 ரன்கள் எடுத்து வெளியேறினர். 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறிய நிலையில் வெப்ஸ்டர் களத்துக்கு வந்தார். ஸ்மித் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அலெக்ஸ் கேரி 21, கேப்டன் கம்மின்ஸ் 10, ஸ்டார்க் 1 ரன் எடுத்து வெளியேறினர். தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் பதிவு செய்து அசத்தினார் வெப்ஸ்டர். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக போலண்ட் 9 ரன்கள் எடுத்து சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆனார். முதல் இன்னிங்ஸில் 51 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆஸி. ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கேப்டன் பும்ரா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகிறது.

பும்ராவுக்கு என்ன ஆனது? – இந்திய அணி பந்து வீசிய போது கேப்டன் பும்ரா களத்தில் இருந்து வெளியேறினார். உணவு நேர இடைவேளைக்கு பிறகு ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசிய நிலையில் அவர் வெளியேறினார். தொடர்ந்து மைதானத்தில் இருந்து அவர் காரில் புறப்பட்டு செல்லும் காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்பானது. அவர் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சொல்லப்பட்டுள்ளதாக தகவல். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இந்திய அணி நிர்வாகம் இன்னும் பகிரவில்லை. அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுவாரா என்ற கவலை இப்போது எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here