‘உறுதி’யான திமுக கூட்டணியை குலைக்க முயற்சி: திருமாவளவன்

0
79

 “திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணியை குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை நிர்வாகியின் மகளின் திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 14-ம் தேதி திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில், அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுகிற ‘மதசார்பின்மையை காப்போம்’ மாபெரும் பேரணி நடைபெறுகிறது.

மதச்சார்பின்மைக்கு ஆதரவாக காங்கிரஸ் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட இண்டியா கூட்டணி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அணியைத் தகர்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் சதித்திட்டம் போடுகிறது” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், “நீதிமன்ற உத்தரவு என கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பம் என்றால் சாதிய உள்நோக்கத்துடன் சில அதிகாரிகள் செயல்பட்டு, கொடி கம்பத்தின் பீடம் உள்ளிட்டவைகளை அவசரமாக அகற்றுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது.

திமுக கூட்டணியை குலைக்கும் நோக்கத்தில் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. திருவள்ளுவரை ஆளுநர் ஆர்.என் ரவி ‘சனாதன புலவர்’ என கூறி வருவது தமிழ் உணர்வாளர்களை ஆர்.எஸ்.எஸ் சக்திகளாக மாற்ற முயற்சிக்கிறார். முருக பக்தர்களை எல்லாம் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களாக மாற்ற முருக பக்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டை டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா போன்று நினைத்து காய் நகர்த்த வேண்டாம். உங்கள் முயற்சி ஒருபோதும் பலிக்காது.

தமிழ்நாடு ஏற்கனவே பண்படுத்தபட்ட மண், முருக பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் மதசார்பற்றவர்களாக தான் இருப்பார்கள். ஐயப்ப பக்தர்களாக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்களுடன் சுமூகமாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறையை தூண்ட முடியாது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதே கிராமத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 8.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திருமாவளவன் திறந்து வைத்தார். இஸ்லாமிய ஐக்கிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here