பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாக். விமான தளங்கள் மீது தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல்

0
159

இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

துருக்கி, ஈரான், அஜர்பைஜான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று அஜர்பைஜானின் லாசின் நகரில் முகாமிட்டிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கடந்த 10-ம் தேதி அதிகாலையில் தொழுகையை முடித்த பிறகு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு இருந்தது. அதாவது அதிகாலை 4.30 மணிக்கு பிறகு தாக்குதலை தொடங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாக இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ தாக்குதல் குறித்து எங்களது ராணுவ தளபதி ஆசீம் முனிர் அதிகாலையில் என்னிடம் தகவல் தெரிவித்தார்.

நாங்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கிவிட்டது. இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் விமான படை தளங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அந்த நாட்டு ராணுவம், விமானப் படை கூறி வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் விமான படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்த நாட்டு பிரதமர் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டி அமைந்திருக்கிறது. அங்கு ராணுவ தலைமையகம் செயல்படுகிறது. அதே வளாகத்தில் நூர் கான் விமான படை தளம் அமைந்துள்ளது. இந்த விமான படை தளம் உட்பட பாகிஸ்தானின் 11 விமான படை தளங்களை பிரம்மோஸ் ஏவுகணைகள் மிகத் துல்லியமாக தாக்கி அழித்தன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களும் முழுமையாக அழிக்கப்பட்டது. நூர்கான் விமான படை தளத்தில் அணு ஆயுத தலைமை கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அதன் மிக அருகே பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பணிந்தது. அந்த நாட்டின் வேண்டுகோளை ஏற்று சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இவ்வாறு இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here