கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்கள் கைதுக்கு சங்கங்கள் கண்டனம்

0
121

கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்களைக் கைது செய்ததற்கு, மருத்துவர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை கடந்த 11-ம் தேதி தொடங்கியது.

இந்த பாதயாத்திரையை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்ய இருந்தனர். ஆனால், சைதாப்பேட்டையில் மருத்துவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவர்கள் நடத்தும் போராட்டங்களை முடக்குவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல்களை சமூக நீதி பேசும் அரசு செய்வது வருந்தத்தக்கது” என்று தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொரு போராட்டத்தையும் நசுக்க நினைப்பதன் மூலம் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் களத்தில் இறங்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ள வேண்டாம். முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here