20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் லிஹாவோ ஷெங் 254.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் 252.4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்க் ஷ் பாட்டீல் 230.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க் ஷ் பாட்டீல், பார்த்த் மானே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1890.1 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனா 1899 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், தென் கொரியா 1884.2 புள்ளிகளை குவித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
செபக்டக்ராவில் ஏமாற்றம்
ஆடவருக்கான செபக்டக்ரா அணிகள் பிரிவில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது. இதில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதுகிறது.
பாட்மிண்டனில் அசத்தல்
ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான பாட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தியாவின் லக் ஷயா சென் 21-4, 21-12 என்ற கணக்கில் ஐமன் ஜமானையும், ஆயுஷ் ஷெட்டி 21-4, 21-13 என்ற கணக்கில் கவுரப் சிங்கையும், கிடாம்பி காந்த் 21-15, 21-9 என்ற செட் கணக்கில் ஜுமார் அல் அமினையும் வீழ்த்தினர்.
கபடியில் சிறப்பான தொடக்கம்
ஆடவருக்கான கபடியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது. இதில் இந்திய அணி 49-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் இந்திய அணி 31-9 என முன்னிலை பெற்றிருந்தது. அயன் லோஹ்சாப், தேவாங்க் தலால் ஆகியோர் ரெய்டில் சிறப்பாக செயல்பட்டனர். 2-வது பாதியில் இந்திய அணி மேலும் 18 புள்ளிகளை குவித்து மிரட்டியது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று தென் கொரியாவுடன் மோதுகிறது. மகளிருக்கான கபடியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 42-21 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்திய மகளிர் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஈரானுடன் மோதுகிறது.
கால் இறுதி சுற்றில்…
மகளிருக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடியது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி 11-3, 11-3, 11-4 என்ற செட் கணக்கில் அலீனா கானையும், சின்ட்ரலா தாஸ் 11-6, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் கல்சும் கானையும், ஜா அகுலா 11-4, 11-4, 11-5 என்ற செட் கணக்கில் ஃபாத்திமா கானையும் தோற்கடித்தனர்.
எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தோனேஷியா, சிங்கப்பூர் அணிகளையும் இந்திய மகளிர் அணி வென்றிருந்தது. ஆடவர் பிரிவிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தது. இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 11-4, 11-3, 11-5 என்ற கணக்கில் முகமது கானையும், சத்யன் ஞானசேகரன் 11-1, 11-8, 11-9 என்ற கணக்கில் அப்பாஸ் கானையும், பயாஸ் ஜெயின் 11-2, 11-5, 11-7 என்ற கணக்கில் முகமது கானையும் வீழ்த்தினர்.
நியெமான் வாங்சு 15-வது இடம்
வுஷு விளையாட்டில் மகளிருக்கான சாங்குவான் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நியெமான் வாங்சு 9.573 புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஹாங்காங்கின் ஹுய் யு லிடியா ஷாம் 9.713 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், மக்காவின் சோ மான் சோ 9.710 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இந்தோனேஷியாவின் யூஜீனியா டிவா விடோடோ 9.706 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஸ்ரீஹரி நடராஜ் 10-வது இடம்
நீச்சலில் ஆடவருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பந்தய தூரத்தை 25.52 விநாடிகளில் கடந்து 10-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஆடவருக்கான 50 மீட்டர் ப்ரீஸ்டைலில் இந்தியாவின் ஆகாஷ் அணி 26-வது இடமும், கீதேஷ் 28-வது இடமும் பிடித்தனர். 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்றில் இந்தியாவின் தனுஷ் சுரேஷ் பந்தய தூரத்தை 1:03.46 விநாடிகளில் கடந்து 22-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறினார்.
சஜன் பிரகாஷ், தக்ஷன் சசிகுமார், வேதாந்த் மாதவன், அனீஷ் சுனில் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய ஆடவர் அணி 4×200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறியது. தகுதி சுற்றில் இந்திய அணி 7:24.32 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 9-வது இடத்தை பிடித்தது.
சாஃப்ட் டென்னிஸில் தோல்வி
சாஃப்ட் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஆத்யா திவாரி, ஜெய் மீனா ஜோடி, பிலிப்பைன்ஸின் கிறிஸ்டி சனோசா, ஷெர்வின் ரே நுகுயிட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஆத்யா திவாரி, ஜெய் மீனா ஜோடி 4-2, 2-4, 2-4, 3-5, 2-4, 5-3, 6-8 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, இலங்கை அணியுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கால் இறுதி சுற்றில் ஜப்பானையும், அரை இறுதியில் வங்கதேச அணியையும் வீழ்த்தி இருந்தது. இலங்கை அணி அரை இறுதியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து இருந்தது.














