நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் பாட்மிண்டனில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா, ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் 11-21, 21-5, 21-19 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள கோடை நரோகாவை வீழ்த்தினார்.
2-வது நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-18, 24-22 என்ற செட் கணக்கில் ஹோக்கி டகுரோ, கோபயாஷி யுகோ ஜோடியை வீழ்த்தியது. கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-10, 21-19 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீரரான கோகி வதனபேவை வீழ்த்தினார்.
முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளது.
இந்திய மகளிர் அணி தோல்வி
பாட்மிண்டனில் மகளிருக்கான அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 23-21, 18-21, 6-21 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீராங்கனையான அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார்.
அடுத்த ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனையான உன்னதி ஹூடா 16-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள டோமோகா மியாசாகியிடம் வீழ்ந்தார். இதனால் இந்திய அணி 0-2 என பின்தங்கியது. 3-வது நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் யூகி ஃபுகுஷிமா, மயூ மாட்சுமோட்டோ ஜோடியை வீழ்த்தியது.
இதனால் இந்திய அணி மீண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடுத்த நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி சர்மா 12-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான நோஸோமி ஒகுகராவிடம் தோல்வி அடைந்தார். முடிவில் ஜப்பான் 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.














