Home விளையாட்டு செய்திகள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் ஒரு தங்கம், 4 வெள்ளி வென்றது இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் ஒரு தங்கம், 4 வெள்ளி வென்றது இந்தியா

0

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று கலப்பு தொடர் ஓட்டத்தில் ரூபால் சவுத்ரி, சந்தோஷ் குமார், விஷால், சுபா வெங்கடேஷன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி 3:18.12 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது.

டெகத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7,618 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.90 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபால் சவுத்ரி பந்தய தூரத்தை 52.68 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா பந்தய தூரத்தை 4:10.83 விநாடிகளில் எட்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் யூனுஷ் ஷா பந்தய தூரத்தை 3:43.03 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஜப்பானின் கசுடோ லிசாவா (3:42.56) தங்க பதக்கமும், தென் கொரியாவின் ஜெயுங் லீ (3:42.79) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் விஷால் பந்தய தூரத்தை 45.57 விநாடிகளில் கடந்த 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். மகளிருக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங், அன்சி சோஜன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

தகுதி சுற்றில் ஷைலி சிங் 6.17 மீட்டர் நீளமும், அன்சி சோஜன் 6.14 மீட்டர் நீளமும் தாண்டினர். 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி ஹீட்ஸில் பந்தய தூரத்தை 13.18 விநாடிகளில் கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version