ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாகவுள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை நகல்: இந்த வழக்கில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செம்பியம் போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த குற்றப்பத்திரிகையின் நகல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக வேலூர் சிறையில் இருந்து ரவுடி நாகேந்திரனும், பூந்தமல்லி, சைதாப்பேட்டை, புழல் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மற்ற 26 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதையடுத்து முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன், இந்த வழக்கு விசாரணை டிச.12-ம் தேதி முதல் தொடங்கும் எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்தார். அப்போது ரவுடி நாகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, ‘‘நாகேந்திரன், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவரை வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’’ என வாதிட்டார். அப்போது ரவுடி நாகேந்திரன், ‘‘நான் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். என் மீது பொய்யாக இந்த வழக்கைப்பதிவு செய்துள்ளனர்’ என்றார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: அதையடுத்து நீதிபதி, ‘‘நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது குறித்து சிறைத்துறை டிஜிபி-யின் கருத்தைக்கேட்டு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, நாகேந்திரனை புழல் சிறையில் வைத்திருக்க முடியுமா என்பது குறித்தும் சிறைத்துறை அதிகாரிகளின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்’’ என மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜனுக்கு அறிவுறுத்தினார்.
5 ஆயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை டிஜிட்டல் ஆவணமாக வழங்க வேண்டும், என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டது. அப்போது ரவுடி நாகேந்திரனும், கைதாகியுள்ள வழக்கறிஞர் அருளும், ‘‘இந்த வழக்கில் தங்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்க முடியவில்லை. அப்படியே நியமித்தாலும் வழக்கறிஞர்களை மிரட்டுகின்றனர்’’ என நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதி, ‘‘ஆதாரமின்றி யார் மீதும் குற்றம்சாட்டக்கூடாது. நீங்கள் வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளுங்கள். மிரட்டல் வந்தால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார். அதையடுத்து 27 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.