முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பன்னாட்டு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக மாணவிகள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டாக்களை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் தாங்கள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டாக்களை கழற்றி வெளியே வைத்துவிட்டு பங்கேற்றனா். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நம்பிக்கை இழந்துள்ளனர். இது என்ன விதமான எதேச்சதிகாரம்?’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.














