அண்ணா பல்கலை. விவகாரத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு: மா.சுப்பிரமணியன் ரியாக்‌ஷன் என்ன?

0
208

அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் கடந்த டிச.24-ம் தேதி இரவு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அன்றைய தினம் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம், ஞானசேகரன் செல்போனில் 6 முறை பேசி உள்ளார். அதன்பிறகு, சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, இன்னொரு காவல்துறை உயர் அதிகாரியிடம் கோட்டூர் சண்முகம் பேசுகிறார்.

யாரை காப்பாற்றுவதற்கு இவர்கள் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறார்கள்? டிச.24-ம் தேதி 2 காவல் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஃப்ஐஆர் வேண்டாம், உன் வாழ்க்கை கெட்டுவிடும் என பேசியிருக்கிறார்கள். எனவே, கோட்டூர் சண்முகம், இவரிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தை யாராலும் ஏற்க முடியாது. காவல் துறை சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு, 5 மாதங்களில் மிகப்பெரிய தண்டனையை பெற்றுத் தந்துள்ளது. காவல் துறையின் செயல்பாட்டுக்கு நீதிபதியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வட்டச் செயலாளர் சண்முகம் எனக்கு போன் செய்தார் என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? நான் ஒரு மாவட்டச் செயலாளர். எனது தலைமையில் உள்ள நிர்வாகத்தில் 82 வட்டச் செயலாளர்கள் உள்ளனர். தினமும் எனக்கு 10, 15 வட்டச் செயலாளர்கள் போன் செய்கின்றனர். இந்த தேதியில், இந்த நேரத்தில் வட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு போன் செய்துள்ளார் எனவும், மா.சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, “அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்லாத நாளே இல்லை. ஆதாரம் இருந்தால் அவர் வெளியிடலாம். நீதிமன்றத்தை அணுகலாம். எங்களுக்கு பயம் இல்லை. எது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here