ஜார்ஜ் சோரஸுக்கு அமெரி்க்காவின் உயரிய விருது: கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சனம்

0
205

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜார்ஜ் சோரஸுக்கு உயரிய விருது வழங்கி இருப்பது கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசியல், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்த 19 பேருக்கு சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கங்களை அதிபர் ஜோ பைடன் கடந்த சனிக்கிழமை வழங்கினார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸி, நடிகர்கள் மைக்கேல் ஜே பாக்ஸ் மற்றும் டென்ஜெல் வாஷிங்டன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.

இதில், முதலீட்டாளரும் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் நிறுவனருமான ஜார்ஜ் சோரஸுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. சோரஸ் சார்பில் அவரது மகன் அலெக்ஸ் சோரஸ் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் ஜனநாயகம், மனித உரிமைகள், கல்வி மற்றும் சமூக நீதியை வலுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்காக ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் நிறுவனருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, “இந்த 19 பேரும் நம் நாட்டுக்கும் உலகுக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் மதிப்புகளை பாதுகாக்கின்றனர்” என்றார்.

ஜனநாயக கட்சிக்கு ஜார்ஜ் சோரஸ் நன்கொடை வழங்கி வந்த நிலையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, அரசியல் நோக்கத்துடன் சோரஸுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக குடியரசு கட்சியினரும் தொழிலதிபர் எலான் மஸ்க்கும் குற்றம்சாட்டி உள்ளனர்.

டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும் அடுத்த அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு ட்ரம்பின் நண்பருமான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில், “சோரஸுக்கு பைடன் பதக்கம் வழங்கி இருப்பது ஒரு கேலிக்கூத்து” என விமர்சித்துள்ளார்.

தன்னிடம் உள்ள பண பலத்தைக் கொண்டு உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக ஜார்ஜ் சோரஸ் மீது குடியரசு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதவிர, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானியின் பெயரைக் கெடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சோரஸ் செயல்பட்டு வருவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here