அகமதாபாத் விமான விபத்து: இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பதாக பிரிட்டன் உறுதி

0
119

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான நிலையில், இந்தியாவுக்கு முழு உறுதுணையாக இருப்போம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் கூறியது என்ன? – விமான விபத்தை அடுத்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரிட்டிஷ் குடிமக்கள் பலருடன் லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது, இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

லூசி பவல்: விபத்து குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் லூசி பவல், “இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டன், கேட்விக் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுடன் முழு சபை மற்றும் அரசாங்கத்தின் எண்ணங்களும் இருக்கும். இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும். இது சந்தேகத்துக்கு இடமின்றி இங்குள்ள பல குடும்பங்களுக்கும், தங்கள் அன்புக்குரியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பவர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தும். இந்த அனைத்து குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும் எண்ணங்களையும் பகிர்கிறோம். மேலும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும், இந்த நாட்டில் உள்ளவர்களுக்கும் அரசாங்கம் அனைத்துவிதத்திலும் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் விவரம்: அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்கு புறப்பட்ட இந்த போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்.

பரபரப்பான அகமதாபாத் விமான நிலையம்: குஜராத்தின் அகமதாபாத்திற்கு வடக்கே 9 கி.மீ தொலைவில் உள்ள ஹன்சோலில் அமைந்துள்ள ஒரு பெரிய சர்வதேச விமான நிலையமான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், நாட்டின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சுமார் 245 விமானங்கள் வந்து செல்கின்றன.

2024-25-ஆம் ஆண்டில் அகமதாபாத் விமான நிலையம் 1.30 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14.8% அதிகம். 2023-24 ஆம் ஆண்டு வரை இந்த விமான நிலையத்தில் ஒரு லட்சம் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் கையாளப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து விமானங்கள் பயணிக்கின்றன. உலகளவில் 80-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தில் மொத்தம் 21 விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், இண்டிகோ முன்னணியில் உள்ளது.

2026-ஆம் ஆண்டுக்குள் விமான பயணிகள் போக்குவரத்து ஆண்டுதோறும் 1.98 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை விமான நிலையம் திறக்க உள்ளது. இந்தத் திட்டத்துக்கு அதானி அகமதாபாத் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (AAIAL) ரூ. 31.30 பில்லியன் முதலீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here