பரு​வகால நோய்​களின் பாதிப்பு தொடர்​வ​தால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலை​யங்​களி​லும் மருந்​துகளை இருப்​பில் வைக்க நடவடிக்கை

0
152

பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

டெங்கு, இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட தொற்றுகள் மழை மற்றும் குளிர் காலங்களிலும், வெயில் காலங்களில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, அக்கி போன்றவைகள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி அனைத்து கால நிலைகளிலும் எல்லா விதமான தொற்றுகளும் பரவி வருகின்றனர். குறிப்பாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் அம்மை பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல், மாசுபட்ட நீர் மற்றும் உணவு மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சல் கோடை காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான அசித்ரோமைசின், ஓசல்டாமிவிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 320 மருந்துகளை போதிய எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல், சளி மருந்துகளில் இருந்து உயிர் காக்கும் உயர் மருந்துகள் வரை அனைத்துமே இருப்பில் உள்ளன. இவைதவிர 13 வகையான தடுப்பூசிகளும் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளன.

ரேபிஸ் தடுப்பூசிகள் மட்டும் 1.08 லட்சம் குப்பிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளன. பாம்பு கடிக்கான மருந்துகள் 21 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்ஃபார்மின் மாத்திரைகள் 11 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது.

மருந்து மேலாண்மை இணையதளத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு உள்ள மருந்துகள், தடுப்பூசிகளை நாள்தோறும் பதிவேற்ற உத்தரவிட்டு, அந்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எவ்வளவு மருந்துகள் உள்ளன என்பதை சென்னையிலிருந்தே பார்க்கிறோம்.

இதன்மூலம் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில், இருப்பை உடனுக்குடன் உறுதி செய்து செய்கிறோம். எந்த பருவத்தில் எத்தகைய நோய் பரவினாலும், அதனை எதிர்கொள்வதற்கான மருந்து கையிருப்பும், சிகிச்சை கட்டமைப்பும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here