தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து பேசியதாவது: தமிழகம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலமாகும். அதன்படி மொத்தம் 49 நிறுவனங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் சமரச அலுவலர்கள் பேச்சுவார்த்தைகளின் மூலம் விலக்கிக் கொள்ளப்பட்டன.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8,373 தொழிற்தாவாக்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 24 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் மற்றும் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பணியாளர் இழப்பீட்டு சட்டத்தின்கீழ் 2,119 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.89.61 கோடியை இழப்பீட்டு தொகையாக பெற்று தந்துள்ளோம். தமிழகத்தில் நடப்பாண்டுக்குள் குழந்தை தொழிலாளர் முறையும், 2030-ம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் முறையும் அகற்றப்படும்.
மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய இணையவழி தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புத் துறை மூலமாக இதுவரை 309 மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2 லட்சத்து 49,392 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 71 அரசு ஐடிஐ.களில் உட்கட்டமைப்பு வசதிகள் டாடா டெக்னாலஜி உடன் இணைந்து ரூ.2,877 கோடியில் 4.0 தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குவளை அரசு ஐடிஐ-யில் மாணவர்கள் தங்கி பயில ரூ.3.5 கோடியில் புதிய மாணவர் விடுதி கட்டப்படும். 32 ஐடிஐ.களில் பழைய கட்டிடங்களின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.67.64 கோடியில் புதுப்பிக்கப்படும். தொலைதுரப் பகுதிகளில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள் வசதிக்காக 50 ஐடிஐ விடுதிகள் ரூ.22.98 கோடியில் மேம்படுத்தப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்கள் அன்றாட பணி தொடர்பாக அதிகளவில் காலையில் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் ரூ.20.25 கோடியில் அமைக்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித் தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு செவிலியர் (Nursing), உணவு தயாரித்தல் மற்றும் சேவை (Catering and Services) ஆகிய பட்டயப் படிப்புகளை பயில ரூ.3 ஆயிரம் உதவித் தொகை ஆண்டுதோறும் தரப்படும். குழந்தைகள் உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகையுடன் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
கட்டுமான தொழிலாளர் குழந்தைகளில் பிஎச்டி பயில்பவர்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ.15,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் திறனை மேம்படுத்த 7 நாட்கள் திறன் பயிற்சி ஊதியத்துடன் 50,000 பேருக்கு ரூ.45.21 கோடியில் வழங்கப்படும்.
தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 1,000 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாங்கும் செலவில் தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.














