அண்மையில் நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியின் சொந்த பலத்தால் கிடைத்துவிடவில்லை. திமுக கூட்டணியால்தான் சாத்தியமானது. நான் எம்.பி.யாக இருந்த மயிலாடுதுறை திமுக கூட்டணிக்கு எஃகு கோட்டையாக இருந்துள்ளது. காரணம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 5 இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் வென்றுள்ளன. இரண்டு இடங்கள் திமுகவுக்கும், தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஓர் இடமும் கிடைத்துள்ளன.
அதாவது 5 தொகுதிகளில் விஜய்யின் தவெகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, மக்கள் தீர்ப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் தவெகவுக்கு எதிராகவும் அமைந்திருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 35 ஆண்டு காலமாக தனித்துவமிக்க மயிலாடுதுறை தொகுதியுடன் கொண்ட என் தொடர்பின் பின்னணியிலிருந்தே இதனை ஆழ்ந்த வருத்தத்துடனும் துயரத்துடனும் தெரிவிக்கிறேன்.
அதேநேரத்தில் மாநில அளவிலான மக்கள் தீர்ப்பு, திமுக-அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு எதிராகவும், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பது உண்மையே. விஜய் முற்றிலும் மதச்சார்பற்றவர் என்பதும், பரந்த திராவிட ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டவர் என்பதும் உண்மைதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், நீண்டகால நம்பகமான கூட்டணிக் கட்சியை காங்கிரஸ் இப்படி திடீரென்று கைவிடுவது மலிவான சந்தர்ப்பவாத அரசியல் வாசனையை வீசுகிறது. சந்தர்ப்பவாதம்தான் சாணக்கிய அரசியலின் சாரம்.
ஆனால், அது காந்தியின் காங்கிரஸின் உண்மை அரசியல் அல்ல. இந்திய தேசிய காங்கிரஸின் மூதாதையர்கள் இத்தகைய சந்தர்ப்பவாத, மலிவான அரசியலை ஏற்றுக்கொள்வார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. மேலும், எப்போதும் யதார்த்தவாதியான ஜவஹர்லால் நேருவும் சந்தேகப்பட்டிருப்பார். நீண்ட காலமாக கொந்தளிப்பான காலங்களிலும் நம்முடன் நின்ற, நெருக்கடியில் உறுதியாக இருந்த ஒரு நேர்மையான கூட்டணி கட்சியை மே 4-ம் தேதி வரை நாம் இகழ்ந்த ஒருவருக்காக கைவிடுவது என்பது அரசியல் ரீதியில் அர்த்தமுள்ளதா? நெறிமுறையானதா? அரசியல் ரீதியில் கூட புத்திசாலித்தனமானதா?
இந்த கேள்விகளோடு தவிக்கும் போது, போட்டி முடிந்த பின் குதிரையை மாற்றிக் கொள்ளும் இந்தச் செயல் என்னில் ஆழ்ந்த அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பவாத மாற்றத்தில், மகாத்மா காந்தி கற்றுக் கொடுத்தது போல நன்னடத்தை, தன்னடக்கம், தியாகம் ஆகியவற்றால் தூண்டப்படாமல், அரசியலின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும் உடனடி பலனை நோக்கி நகர்கிறோம் என்பது தெளிவாகிறது. இந்தியா கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டுமே ‘சகோதரர்’ ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப்படுத்தினார். அந்த நண்பரை இவ்வாறு திடீரென கைவிடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? மேலும், ஒருவர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது, கரை சேர வேண்டும் என்பதற்காக, அந்த மூழ்கடிப்புக்கே பொறுப்பான நபரோடு… ஓர் அமைச்சர் அல்லது இரண்டு அமைச்சர் பதவிக்காக நமது கவுரவத்தை விற்றுவிடுவதா? மிக யதார்த்தமாக சிந்தித்தாலும், நாம் நிலையான ஒரு கப்பலில் சேருகிறோமா அல்லது மூழ்கும் கப்பலில் ஏறும் எலியாக மாறுகிறோமா?
என்னைப் பொறுத்தவரை, நெருக்கடியான நேரங்களில் கூட நெறிமுறையும் அரசியலும் ஒன்றிணைகின்றன. நமது மிகக் கடினமான காலங்களிலும் திமுக நம்முடன் உறுதியாக நின்றது. எனவே, அவர்களுடன் கூட்டணியை தொடர்வதுதான் நெறிமுறை. திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை ஆசிய அளவில் மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
சில ஆண்டு காலம் காத்திருந்து, 2029 அல்லது 2031-ல் யாரை கூட்டணிக்கு தேர்ந்தெடுப்பது என்று நன்கு மதிப்பீடு செய்து காங்கிரஸ் முடிவெடுத்திருக்கலாம்.
ஆனால், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 28 தொகுதிகளில் 23 இடங்களில் தவெக நம்மை தோற்கடித்திருக்கிறது. இந்த பின்னணியில் அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேருவது, கட்சியை நெறியற்றதாக மட்டுமல்ல, அரசியல் ரீதியிலும் மூர்க்கமானதாக காட்டும்.
மேலும், பின்கதவு வழியே வகுப்புவாத பாஜக நுழைவதை இது எளிதாக்குமானால், அரசியல் கால்பந்து வரலாற்றில் மிக மோசமான ‘சேம் சைட் கோல்’ அடித்தவர்கள் ஆவோம். இனி யார் நம்மை நம்புவார்கள்?
– மணி சங்கர் அய்யர், காங்கிரஸ் மூத்த தலைவர்
