ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை: பிரதமர் தொடங்கி வைத்தார்

0
207

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

9-வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்தரி பகவானின் பிறந்த நாளை ஒட்டி டெல்லியில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களில் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத் திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதன்படி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். புதிய திட்டத்தின் மூலம் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தினம் கொண்டாடப்படு கிறது. இன்றைய தினம் நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பல்வேறு சுகாதார திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றி உள்ளோம்.

நாடு முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்காக தனி காப்பீடு அட்டைகள் வழங்கப்படும். அனைத்து மூத்த குடிமக்களும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெறலாம். டெல்லி யூனியன் பிரதேசம் மற்றும் மேற்குவங்க அரசுகள் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் இணையவில்லை. இதனால் டெல்லி, மேற்குவங்கத்தை சேர்ந்த மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக மிகவும் வருந்துகிறோம்.

நாடு முழுவதும் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர். ஆயுர்வேத சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியாவுக்கு பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். நமாமி கங்கை திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை, மூலிகை செடிகள் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓலைச்சுவடிகள், செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாரம்பரிய மருத்துவ தகவல்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒன்றிணைக்கப்படும். இதன்மூலம் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய புரட்சிக்கு வித்திடப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

அமராவதியில் ட்ரோன் மருத்துவ சேவை: ஆந்திராவின் அமராவதி எய்ம்ஸ் மருத்துவமனையில் ட்ரோன் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள குக்கிராமமான நூதக்க ஆரம்ப சுகாதார மையத்துக்கு ட்ரோன் அனுப்பப்பட்டது. அங்கு ஒரு பெண் நோயாளியிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரி ட்ரோனில் வைக்கப்பட்டது. பின்னர் ட்ரோன் எய்ம்ஸ் மருத்துவமனையை வந்தடைந்தது. இந்த ட்ரோன் வசதி அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here