சிறந்த நூல் ஆசிரியர்களை கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் வேண்டுகோள்

0
159

சிறந்த நூல் ஆசிரியர்களை கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். எழுத்து அறக்கட்டளை மற்றும் கவிதா பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் ஆசு எழுதிய பஞ்சவர்ணம் நூலின் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் சேது. சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார். முன்னாள் மத்திய அமைச்சரும், எழுத்து அறக்கட்டளை தலைவருமான ப.சிதம்பரம் விழாவுக்கு தலைமை வகித்தார்.

விழாவில் எழுத்தாளர் ஆசு எழுதிய பஞ்சவர்ணம் நூலை கவிஞர் வைரமுத்து வெளியிட முதல் பிரதியை ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆசுவுக்கு 2023-க்கான எழுத்தாளர் சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு மற்றும் ரூ.2 லட்சத்துக்கான காசோலைவழங்கப்பட்டது. பின்னர் நூல் அறிமுக உரையைத் எழுத்தாளர் அகரமுதல்வனும், மதிப்புரையை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனும் வழங்கினர்.

பின்னர் மப.சிதம்பரம் பேசியதாவது: ஒரு நாவலை கண்டுபிடித்து வெளியிட்டு, அந்த நாவலை அறிமுகப்படுத்துவது என்பது பெரிய காரியம் அல்ல. நூல் ஆசிரியரை கண்டுபிடித்து, அவரை கவுரப்படுத்துவதுதான் பெரிய வேலை. இதில், பஞ்சவர்ணம் என்ற நாவலை கண்டுபிடித்தது மட்டும் அல்ல, அதன் ஆசிரியர் ஆசுவையும் கண்டுபிடித்து அறிமுகம் செய்கிறோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதேபோல, சிறந்த நூல் ஆசிரியர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு உலகத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

சவுந்தரா கைலாசம் ஒரு கவிஞர், இலக்கிய ஆர்வலர். அடுமட்டுமில்லாமல், பல எழுத்தாளர்களின் ரசிகர். ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களை நட்போடு பார்த்தவர். அவரது பெயரில் இந்த விருதை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து, இந்த விருதை வழங்கி வருகிறோம். அது எழுத்துக்கு பெருமை. என்சிஹெச்பி என்ற நிறுவனம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் மலிவு விலையில் ஏராளமான நூல்களை விற்பனை செய்ய பெரும் முயற்சி எடுத்தது.

அதேபோல், பதிப்பாளர்கள் அனைவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். புத்தக திருவிழா, கண்காட்சி நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் பிறகும் கூட நூல்கள் விற்பனை ஆவது இல்லை என்பது வருத்தத்துக்குரியது. அனைவரும் நூல்களை வாங்கி படிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கும் வாங்கி கொடுங்கள். நூல்களை வாங்கினால் தான் எழுத்தாளர்கள் எழுதுவார்கள்’ என்றார். இந்நிகழ்வில் கவிஞர் இலக்கியா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here