நீலக்கொடி கடற்கரை திட்டத்தில், மெரினா கடற்கரையில் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நூற்றாண்டுகள் பழமையான சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை நவீனப்படுத்தவும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களை கோரியுள்ளது.
சர்வதேச தரத்தைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கோவளம் கடற்கரை மட்டுமே இந்த சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்தும் வகையில், ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையை மேம்படுத்தி பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மெரினா உட்பட 3 கடற்கரைகள் நீலக்கொடி சான்றுக்கு தயாராகி வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கைகளை தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் ரூ.5.60 கோடி மதிப்பில், கடற்கரைப் பகுதியில் நடைபாதை, சைக்கிள் தடங்கள், விளையாட்டுப் பகுதி, கண்காணிப்பு கோபுரம் போன்ற திட்டங்களை செயல்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி தற்போது ஒப்பந்தம் கோரியுள்ளது.
அதேபோல், சென்னை சைதாப்பேட்டையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் நூற்றாண்டு பழமையான காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தும் வகையில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.24 கோடியில் காய்கறி மார்க்கெட் சீரமைக்கப்படுகிறது.
ஓர் ஏக்கர் பரப்பு கொண்ட இந்த மார்க்கெட்டில், வாகன நிறுத்துமிடம், காய்கறி ஏற்றி, இறக்குவதற்கான இடங்கள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 200 கடைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தை கோரியுள்ளது.














