தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இந்த விளக்கத்தை தந்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக் ஷா) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.அதன்படி தமிழகத்துக்கு நடப்பு கல்வியாண்டில் (2024-25) ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். அதில் முதல்கட்ட தவணையாக ரூ.573 கோடியை கடந்த ஜூனில் விடுவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதற்கு மத்திய அரசின் பிஎம் பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய மறுப்பதால் அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பகுதிநேர ஆசிரியர்,பணியாளர்களுக்கான சம்பளம், கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இந்த நிதி ஒதுக்கீடு சார்ந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு கிடைத்த பதிலின் அடிப்படையில், “2024-25-ம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருக்கின்றன. அதற்கான அனுமதி கிடைத்ததும் நிதிஒதுக்கப்படும். இதுதவிர 2020-21 முதல் 2023-24-ம் கல்வியாண்டு வரையான 4 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக மத்திய அரசிடம் ரூ.7,508 கோடி முன்மொழியப்பட்டது. அதில், ரூ.7,199 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.














