சென்னை: யு-19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யு-19 இந்திய அணிமுதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. நித்ய பாண்டியா 94 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. வைபவ் சூர்யான்ஷி 3 ரன்னில் ராம் குமார்பந்தில் போல்டானார். மற்றொரு தொடக்க வீரரான விஹான் மல்கோத்ரா 75 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோக்ஸ்ட்ரா பந்தில் வெளியேறினார்.
இதன் பின்னர் நித்ய பாண்டியா, கே.பி.கார்த்திகேயா ஜோடி சீராக ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடி வந்த நித்ய பாண்டியா 135 பந்துகளில், 12பவுண்டரிகளுடன் 94 ரன்களும்கார்த்திகேயா 99 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 71ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது. இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சோஹம் பட்வர்தன், நிகில் குமார் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
நிகில் குமார் 93 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டர்சன் பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி4-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் யு-19 இந்திய அணி 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. சோஹம் பட்வர்தன் 61, ஹர்வன்ஷ் பங்கலியா 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில்ஹோக்ஸ்ட்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க யு-19 இந்திய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.