சமூக வலைதளங்களில் இருந்து கொல்கத்தா பெண் மருத்துவரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனிடையே மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.இந்த கொடூர கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாகமுன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இருந்து கொல்கத்தா பெண் மருத்துவரின் புகைப்படம், பெயரை நீக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டு உள்ளோம். இந்த உத்தரவை மத்தியஅரசு, மேற்கு வங்க அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.
நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிப்பதில் பயிற்சி மருத்துவர்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அக்டோபர் 31-ம் தேதிக்குள் அரசு மருத்துவமனைகளில் தேவையான சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மீண்டும் போராட்டம்: கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கோரி பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மேற்கு வங்க அரசின் கோரிக்கையை ஏற்று கடந்த 19-ம் தேதி போராட்டம் கைவிடப்பட்டு பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்த சூழலில் கொல்கத்தா புறநகர் பகுதியான காமர்ஹத்தி பகுதியில் உள்ள சாகோர் தத்தா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரு நோயாளி உயிரிழந்தார். அந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவர் மற்றும் செவிலியர்களை தாக்கினர். இதைத் தொடர்ந்து கொல்கத்தா உட்பட மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மேற்கு வங்க அரசு பதில்: பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுவிரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மருத்துவர்கள் கூறும்போது,“மாநில அரசின் பதில் மனு நகல் கிடைத்த பிறகு தீவிரமாக ஆய்வு செய்வோம். அரசின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளனர்.














