திருவட்டாறு அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் பெர்ஜின் குமார் (33). இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அஹானா, சிதறால் பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சிறுமியின் தாத்தா பிரான்சிஸ் டீக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி மாலை சிறுமி அஹானா தனது தாத்தா பிரான்சிஸ் நடத்தும் டீக்கடைக்கு சென்று விட்டு அப்பகுதியில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டெம்போ ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுமி மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுமியின் தலை, நெஞ்சு, இடது கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பெர்ஜின் குமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிதறால் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஆரோமல் என்பவர் மீது நேற்று (29-ம் தேதி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.