95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ஐஓசி, ஒடிசா ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.இந்நிலையில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஐஓசி-போபால் அணிகள் மோதிய ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 5-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணியை வீழ்த்தியது. அரை இறுதி சுற்று நாளை (28-ம் தேதி) நடைபெறுகிறது. இதில் மாலை 4.15 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே – ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து 6 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஐஓசி-இந்திய ராணுவம் அணிகள் மோதுகின்றன.