டெல்லி முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் நேற்று முறைப்படி பொறுப்பேற்றார். அவர். முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டு, அருகில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில்இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். கடந்த 17-ம் தேதிஅவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குபதிலாக கடந்த 21-ம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி மர்லேனா சிங் பதவியேற்றார். டெல்லி முதல்வர் அலுவலகத்துக்கு வந்த அவர் நேற்று முறைப்படி பொறுப்பேற்றார். முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டு, அருகில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார்.
இதுகுறித்து ஆதிஷி மர்லேனா சிங் கூறியதாவது: பகவான் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அவர் வனவாசம் புறப்பட்டபோது அவரது தம்பி பரதர் தீராத வேதனையில் ஆழ்ந்தார். பகவான் ராமரின் பாதுகையை (காலணி) அரியணையில் வைத்து ஆட்சி நடத்தினார். இன்று நானும் அதே நிலையில் இருக்கிறேன். பரதரை போன்று அடுத்த 4 மாதங்கள் டெல்லியை ஆட்சி செய்வேன்.பகவான் ராமர் தனது வாக்குறுதியைக் காப்பாற்ற 14 ஆண்டுகள் வனவாசத்தை ஏற்றுக் கொண்டார். கண்ணியம், ஒழுக்கத்தின் உதாரணமாக அவர் விளங்கினார். இப்போது இந்திய அரசியலில் கண்ணியம், ஒழுக்கத்தின் முன்னுதாரணமாக கேஜ்ரிவால் விளங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.














