வங்க கடலில் ஏற்பட்டுள்ள ‘அக்வான்’ புயல் ஆந்திராவை நோக்கி மணிக்கு 6 கி.மீ வேகத்தில் தீவிர சூறாவளி காற்றுடன் நகர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால் ஆந்திராவின் விஜயநகரம், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், காக்கிநாடா, குண்டூர், பிரகாசம், கிருஷ்ணா, என்.டி.ஆர், நெல்லூர் மாவட்டங்களில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
அக்வான் புயல் நாளை (20-ம் தேதி) ஆந்திராவின் நர்சாபூர்-ஒடிசாவின் பூரி இடையே கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, நேற்று சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, “20-ம் தேதி மதியம் அக்வான் புயல் கரையை கடக்கும் என வானிலை இலாகா தெரிவித்துள்ளது. அக்வான் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூறாவளி காற்றுடன் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், வெள்ளி, சனிக்கிழமைகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அவசர உதவிக்கு 13 மத்திய பேரிடர் மீட்புக்குழுவும், 11 மாநில பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர தயார் நிலையில் தீயணைப்பு படை, மின் வாரிய ஊழியர்களும் உள்ளனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகள் செய்துள்ளனர்” என்றார்.
கடலோர ஆந்திரா, வடக்கு ஆந்திர பகுதியில் அக்வான் புயலையொட்டி இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என விசாகப்பட்டினம் வானிலை இலாகா எச்சரித்துள்ளது. கடலோர ஆந்திர பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதிகார பூர்வமான எச்சரிக்கைகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் பரவும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஆந்திர அரசு எச்சரித்துள்ளது.












