“மாயாஜாலங்கள் நிறைந்த ஆண்டுகள்” – 15 ஆண்டுகால இசைப் பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி

0
10

இசையமைப்பாளர் அனிருத், தனது இசைப் பயணத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘3’ திரைப்படத்தின் ‘வொய் திஸ் கொலவெறி டி’ பாடல் மூலம் உலகளவில் பிரபலமான அவர், இன்று இந்தியாவின் மிக முக்கியமான இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

தனது 15 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “15 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், எங்களது முதல் பாடல் உலகிற்கு அறிமுகமானது. அன்றிலிருந்து இன்று வரை இது ஒரு தொடர்ச்சியான, தடையற்ற பயணமாக இருந்து வருகிறது.

இசை, நினைவுகள், கொண்டாட்டங்கள் மற்றும் மாயாஜாலங்கள் நிறைந்த 15 ஆண்டுகள். தமிழில் தொடங்கி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கும், ஒரு இதயத்திலிருந்து உங்கள் கோடிக்கணக்கான இதயங்களுக்கும் சென்றடைந்த பயணம். சுயாதீன இசை, எங்களுக்குப் பிடித்த சர்வதேசக் கலைஞர்களுடனான கனவுக் கூட்டணிகள், எந்த மொழியில் யார் கேட்டாலும் அவர்களுக்காகப் பாடுவது, இந்த நாடு கண்ட மிகப்பெரிய வெற்றிப் படங்களில் அங்கமாக இருக்கும் பாக்கியம் என அனைத்தும் கிடைத்துள்ளது.

இந்தப் பயணத்தில், நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்கள், நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது; திரையுலகின் தலைசிறந்தவர்களுடன் இணைந்து இசையையும் நினைவுகளையும் உருவாக்கியுள்ளோம்.

இணையதளங்களில் சாதனை படைத்து கோடிக்கணக்கான செவிகளைச் சென்றடைந்தது முதல், உலகெங்கிலும் அரங்குகள் நிறைந்த இசை நிகழ்ச்சிகளை அனுபவித்தது வரை, இசைப் பட்டியல்களில் முதலிடம் பிடித்தது முதல், ஆயிரக்கணக்கான குரல்கள் எங்கள் பாடல்களைத் திரும்பப் பாடியது வரை. நீங்கள் காட்டிய அன்பு மிக அசாதாரணமானது. இசை நிகழ்ச்சிகளின் ஆரவாரம், அந்த உற்சாகம் மற்றும் இசை எல்லைகளைத் தாண்டிச் செல்வதைப் பார்க்கும் உணர்வு ஆகியவை நாங்கள் கனவில் மட்டுமே கண்ட தருணங்கள்.

ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கூட்டணியும், ஒவ்வொரு சாதனையும், ஒவ்வொரு மேடையும், ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு வரமாக இருந்துள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ‘எல்.ஐ.கே’, ‘ஜனநாயகன்’, ‘டிசி’, ‘பாரடைஸ்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களுடன் இந்த 2026-ஆம் ஆண்டு மிக அற்புதமாக அமைந்துள்ளது. 15 ஆண்டுகளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி வேறென்ன இருக்க முடியும்.

இந்தப் பயணத்தின் அடுத்தகட்டமாக, எங்களது புதிய முயற்சியான ‘அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்’ ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. எங்களுக்கு இவ்வளவு கொடுத்த இந்தத் திரையுலகிற்குத் திருப்பிக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை இசை மற்றும் திறமைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது ஒரு நல்வாய்ப்பாகும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here