திரைப்பட உருவாக்கத்தில் ஒரு காட்சியை உயிர்ப்புடன் திரையில் கொண்டு வருவதில் ஒளிப்பதிவாளரின் பங்கு முதன்மையானது. அவரது காட்சிப்பார்வையைச் செயல்படுத்துவதற்குப் பின்னால் கேமரா துறை, ஒளியமைப்புக் குழு மற்றும் உதவி இயக்குநர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இதில் ஒளிப்பதிவாளர், கேமரா அசிஸ்டென்ட்டுகள் மற்றும் அவருடன் தொடர்ந்து பணியாற்றும் கேமராமேன் குழுவினரின் பொறுப்புகள் தனித்துவமானவை.
ஒளிப்பதிவாளரின் பொறுப்புகள்: ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்பு, ஒளியின் தன்மை, வண்ணத் தோற்றம், கேமரா கோணங்கள், லென்ஸ் தேர்வு மற்றும் கேமரா இயக்கம் ஆகியவற்றைத் தீர்மானிப்பவர் ஒளிப்பதிவாளர்.
இயக்குநரின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற காட்சிமொழியை உருவாக்குவது இவரது முக்கியப் பொறுப்பு.
திரைப்பட உருவாக்கத்தின் முன் தயாரிப்புக் கட்டத்தில் லொக்கேஷன் ரெக்கி (Location Recce) கேமரா மற்றும் லென்ஸ் தேர்வு, ஒளியமைப்புத் திட்டமிடல் ஆகியவற்றில் ஈடுபடும் ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பின்போது கேமரா மற்றும் ஒளியமைப்புக் குழுவினருக்கு வழிகாட்டி, ஒவ்வொரு ஷாட்டுக்கும் தேவையான காட்சித் தரத்தை உறுதிசெய்வார். திரைப்படப் படப்பிடிப்பு முடித்து பின் தயாரிப்புப் பணிகள் நடக்கும் கட்டத்திலும் கலர் கிரேடிங் மற்றும் இறுதிக் காட்சித் தோற்றம் தொடர்பான முடிவுகளிலும் பங்கேற்பார்.
கேமரா அசிஸ்டென்ட்டுகள்: கேமரா உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்தல், பராமரித்தல் மற்றும் படப்பிடிப்பின்போது அவை தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்தல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணிகள். கேமரா பாடி, லென்ஸுகள், ஃபில்டர்கள், மீடியா கார்டுகள், பேட்டரிகள் மற்றும் பிற துணைக்கருவிகளை ஒழுங்குபடுத்துவார்கள்.
கேமரா குழுவின் கட்டமைப்பைப் பொறுத்து, முதல் உதவியாளர் ஃபோகஸ் புல்லராக (1st AC/Focus Puller) செயல்பட்டு நடிகர்களின் அசைவுகளுக்கு ஏற்ப துல்லியமான ஃபோகஸைப் பராமரிப்பார். 2-ம் உதவியாளர் (2nd AC) கிளாப்பர் போர்டு, மீடியா மேலாண்மை, லென்ஸ் மாற்றங்கள் மற்றும் கேமரா அறிக்கைகள் போன்ற பணிகளை மேற்கொள்வார்.
இவர்கள் பொதுவாகத் தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தம் மற்றும் படப்பிடிப்பு அட்டவணைக்கு ஏற்பவே பணியமர்த்தப்படுகின்றனர். சிலர் தினக்கூலி அடிப்படையிலும் பணிபுரிவார்கள்; சிலர் நீண்டகால ஒப்பந்தங்களிலும் இருப்பார்கள். இவர்களின் முக்கியப் பொறுப்பு கேமரா அமைப்பின் தொழில்நுட்பச் செயல்பாடுகளைச் சீராக வைத்திருப்பதாகும்.
கேமராமேன் குழு: ஒளிப்பதிவாளருடன் தொடர்ந்து பணியாற்றும் பிரத்யேகக் குழு, அவர் வேலை செய்யும் பாணியையும் காட்சிப்பார்வையையும் நன்கு புரிந்துகொண்டு செயல்படும். அதன் கட்டமைப்பு திரைப்படத்துக்கும் ஒளிப்பதிவாளரின் பணி செய்யும் முறைக்கும் ஏற்ப மாறுபடலாம்.
இயக்க ஒளிப்பதிவாளர் (Operative Cameraman): ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரின் வழிகாட்டுதலின்படி கேமராவை நேரடியாக இயக்கி, காட்சிக்குத் தேவையான நகர்வுகள், ஃபிரேமிங் மற்றும் கேமரா செயல்பாடுகளை மேற்கொள்பவர். இந்தப் பதவியின் பொறுப்புகள் தயாரிப்புத் தரப்புக்கு ஏற்ப மாறுபடலாம்.
இணை ஒளிப்பதிவாளர் (Associate Cameraman): ஒளிப்பதிவாளருக்கு ஆதரவாக கேமரா மற்றும் ஒளியமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறார். கேஃபர், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் ஆர்ட் டிபார்ட்மென்ட் ஆகியோருடன் தொடர்புகொண்டு, ஒளியின் திசை, செட் அமைப்பு மற்றும் படப்பிடிப்புத் தயார்நிலை ஆகியவற்றைக் கவனிக்கிறார். சில தயாரிப்புகளில் இந்தப் பொறுப்புகள் வேறு பதவிகளுடன் பகிரப்படலாம்.
கேமராமேன் உதவியாளர் (Cameraman Assistant): மூத்த குழுவினரின் வழிகாட்டுதலின்படி Flags, Diffusion Materials மற்றும் ஒளியைக் கட்டுப்படுத்தும் உபகரணங்களை அமைப்பதில் உதவுவார். லென்ஸ், ஃபில்டர், கேமரா அமைப்பு மற்றும் ஒளி யமைப்பு தொடர்பான குறிப்புகளைப் பதிவு செய்வதிலும் பங்கேற்கலாம்.
இந்த நிரந்தரக் குழுவினர் ஒளிப்பதிவாளருடன் நீண்டகாலம் பணியாற்றுவதன் மூலம் ஒளியமைப்பு, காட்சிக் கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பத் திட்டமிடல் ஆகியவற்றில் அனுபவம் பெறுகின்றனர். இது அவர்களின் எதிர்கால ஒளிப்பதிவுப் பயணத்துக்கும் உதவுகிறது.
ஒளிப்பதிவாளர், ஒவ்வொரு திரைப்படத்தின் தேவைக்கும், படப்பிடிப்பின் தன்மைக்கும் ஏற்ப, இயக்க ஒளிப்பதிவாளர் (Operative Cameraman), இணை ஒளிப்பதிவாளர் (Associate Cameraman) மற்றும் உதவி ஒளிப்பதிவாளர்கள் (Assistant Cameramen) ஆகியோரின் பணிப் பொறுப்புகளைத் தீர்மானிப்பார்.
சில நேரங்களில், ஒரு காட்சியைப் படமாக்குவதற்கு 6 கேமராக்களுக்கும் மேல் தேவைப்படலாம். அத்தகைய சூழலில், ஒளிப்பதிவாளர் தலைமையில் அனைத்துக் கேமரா குழுவினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள். எனினும், ஒவ்வொரு கேமராவும் எந்தக் கோணத்தில், எந்தக் காட்சிப் பகுதியைப் படமாக்க வேண்டும் என்பதற்கான பொறுப்புகள், அந்தந்த நபரின் தனிப்பட்ட திறமை, அனுபவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒளிப்பதிவாளரால் தீர்மானிக்கப்படும்.
காலநிலை, சூரியப் பாதை மற்றும் ஒளித் தொடர்ச்சி வெளிப்புறப் படப்பிடிப்புகளில் சூரியனின் பாதை மற்றும் காலநிலை மாற்றங்கள் முக்கியச் சவால்களாக அமைகின்றன. ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா குழுவினர் சூரியன் எந்த நேரத்தில் எந்தத் திசையில் ஒளி தரும் என்பதை முன்கூட்டியே கணித்து, படப்பிடிப்பு நேரத்தைத் திட்டமிடுகின்றனர். தேவைக்கேற்ப என் டி ஃபில்டர்ஸ் (ND Filters), டிஃபியூசன் பிரேம்ஸ் (Diffusion Frames) மற்றும் செயற்கை விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.
மேகமூட்டம், மழை அல்லது திடீர் வெளிச்ச மாற்றங்கள் ஏற்படும் போது, காட்சியின் எக்போஸர் (Exposure) மற்றும் லைட்டிங் பாலன்ஸ் (Lighting Balance) மாறாமல் இருக்கக் குழு விரைவாகச் செயல்படுகிறது. வெவ்வேறு நேரங்களில் அல்லது நாட்களில் எடுக்கப்படும் ஒரே காட்சியின் ஷாட்டுகளுக்கு இடையேயான ஒளித் தொடர்ச்சியைப் பராமரிப்பதும் அவசியம்.
உதவி இயக்குநர்களுடன் ஒருங்கிணைப்பு: உதவி இயக்குநர் குழு தயாரிக்கும் படப்பிடிப்பு அட்டவணைக்கு ஏற்ப கேமரா குழு தனது பணிகளைத் திட்டமிடுகிறது. குறிப்பாக, பகல் வெளிச்சத்தைச் சார்ந்த காட்சிகளைச் சரியான நேரத்தில் படமாக்கி முடிப்பதற்காக முதன்மை உதவி இயக்குநருடன் (1st AD) இணைந்து செயல்படுகிறது.
லென்ஸ் மாற்றம், கிரேன் அமைத்தல், பெரிய டிஃபியூசன் பிரேம்ஸ் (Diffusion Frames) நிறுவுதல் போன்றவற்றுக்குத் தேவையான நேரத்தை முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலம் படப்பிடிப்பு அட்டவணையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
தொழில்நுட்ப மாற்றங்களால் தாமதம் ஏற்படும்போது, அடுத்தடுத்த காட்சிகளின் வரிசையை மாற்றுவது குறித்து உதவி இயக்குநர் குழுவுடன் கேமரா குழு ஆலோசித்து முடிவெடுக்கும்.
ஒளிப்பதிவாளர் திரைப்படத்தின் காட்சிமொழியை உருவாக்குகிறார்; கேமரா உதவியாளர்கள் கேமராவின் தொழில்நுட்பச்செயல்பாட்டை உறுதிசெய்கிறார்கள்; உதவி கேமராமேன் குழு காட்சிப் பார்வையை நடைமுறைப்படுத்துவதிலும் ஒளியமைப்பை ஒருங்கிணைப்பதிலும் துணை நிற்கிறது.
காலநிலை மாற்றங்கள், ஒளித்தொடர்ச்சி மற்றும் படப்பிடிப்பு அட்டவணை போன்ற சவால்களை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதன் மூலமே திரைப்படத்தின் காட்சித் தரமும் படப்பிடிப்பின் செயல்திறனும் உறுதி செய்யப்படுகின்றன.














