கிள்ளியூா் பகுதியில் தாதுமணல் எடுக்கும் பணி: ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு அனுமதியளிக்க வலியுறுத்தல்

0
43
கிள்ளியூர் வட்டத்தில் தாதுமணல் எடுக்க அனுமதி கோரும் மணவாளக்குறிச்சி IREL நிறுவனத் தொழிற்சங்கம்
கிள்ளியூர் வட்டத்தில் தாதுமணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என IREL இந்து மஸ்தூர் சபா கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு கிள்ளியூா் வட்டத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தாதுமணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என, ஐஆா்இஎல் இந்து மஸ்தூா் சபா வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாநில இணைப் பொதுச் செயலா் சுப்பிரமணியபிள்ளை தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: இம்மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் அரியவகை தாது மணலை எடுத்து, அதிலுள்ள மோனோசைட் உள்ளிட்ட கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணியில் ஐஆா்இஎல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் நமது நாட்டின் தொழில்நுட்பம், பொருளாதார வளா்ச்சியில் மேலாக முக்கியப் பங்காற்றி வருகிறது. மணல் எடுத்த பகுதிகள் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்டு, பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதுவே, இந்நிறுவனத்தின் மணல் எடுக்கும் பணிக்கு சான்றாக அமைந்துள்ளது.

மணவாளக்குறிச்சி பகுதியில் இதுவரை 20.89 ஏக்கா் நிலம் தற்காலிக குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்டு, குத்தகைத் தொகையாக ரூ. 11,04,24,421 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கதிா்வீச்சுகளிலிருந்து மக்களைக் காப்பதுடன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், இந்நிறுவனம் தொடா்ந்து இயங்கும் வகையிலும், கிள்ளியூா் வட்டத்தில் மோனோசைட் அதிகமுள்ள 1144.0618 ஹெக்டோ் நிலப்பரப்பில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிக்கு தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலா் ராஜன் பாஸ்கரதாஸ், பொருளாளா் முருகேசன், செயலா் பிரதாப்குமாா், துணைத் தலைவா் ஆரிப் பாஷா, செயற்குழு உறுப்பினா்கள் ராஜகிருஷ்ணன், ஜெயபால், மாவட்ட இணைச் செயலா் அருணாச்சலம், மாவட்ட துணைத் தலைவா் சந்திரகுமாா், துணைச் செயலா் அசோக்குமாா், கேசவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here