கர்நாடக மாநிலம் மங்களூருவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஜோகட்டேவில் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) ஆலை இயங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனமான இதில் உள்ள கோக்கர் ஹைட்ரோட்ரீட்டர் (CHD) பிரிவில் உயர் அழுத்தத்தில் இயங்கிக்கொண்டிருந்த கோல்ட் செப்பரேட்டர் உடைந்ததால் நேற்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தால் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து அடர்த்தியான கருப்புப் புகை எழுந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு நெருப்பு மளமளவென அருகிலுள்ள பிரிவுகளுக்கும் பரவியது. இதையடுத்து அவசரகால மீட்புக் குழுக்களும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த வெடி விபத்தால் ஜோகட்டே, கவூர், சூரத்கல், பாஜ்பே, மங்களூரு சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெரிய வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இந்த வெடிப்புச் சத்தத்தின் காரணமாக நிர்வாக அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி கூறுகையில், “இந்த வெடி விபத்து முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான யூனிட்டின் பேட்டரி வரம்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் அவசரகால மீட்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் மீட்பு பணியில் துரிதமாக இறங்கியுள்ளன.
இந்த விபத்தில் மனீஷ் (32) என்ற ஒப்பந்த பணியாளர் தீக்காயத்தின் காரணமாக உயிரிழந்தார். ராஜேஷ் பேப்டிஸ்ட் (36) என்ற ஊழியர் 50 சதவீத தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். படுகாயம் அடைந்த 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேருக்கு புறநோயாளி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது”என்றார்.














