“மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்” என சட்டப்பேரவை பதிலுரையில் முதல்வர் விஜய் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்.7) காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.
முதல்வர் பதிலுரை அளிக்கையில், “சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன் போல் பேசுகிறார். இன்னொரு எம்எல்ஏ ‘திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது’ எனப் பேசுகிறார். இவ்வளவு நாட்களாக இதே மக்கள் தான் இவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். இதைப்போல் பேசிப் பேசித்தான் சட்டப்பேரவையில் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றனர். மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்.
ஆனால் நான் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்கிறேன். ஒரு எம்ஜிஆர் பாடலில், “மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்வர், தம் மக்கள் நலம் என்றேதான் வாழ்வர்” என்றிருக்கும். அவர் யாரை நினைத்தோ பாடினோரோ தெரியாது. ஆனால் தவெகவினர் தமிழக மக்கள் நலனை மட்டும்தான் கருத்தில் கொள்வோம்.
அதனால்தான், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவும் தொட மாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் எனக் கூறுகிறோம். எதற்கெடுத்தாலும் மிசா, மிசாவைப் பார்த்தவர்கள் என்று பேசுகிறார்கள். மிசாவைப் பற்றிய வரலாறு எல்லோருக்கும் தெரியும்.
ஊழல் குற்றச்சாட்டு என்று சொன்னால் ‘ஆதாரம் கொடுங்கள்’ என்றுதான் கேட்பார்களே தவிர ஊழல் செய்யவில்லை என்று திமுகவினர் சொல்ல மாட்டார்கள்.
ஆதாரம் கேட்பவர்களுக்கு சர்காரியா கமிஷன் அறிக்கையைப் பற்றி இங்கே சொல்ல விரும்புகிறேன். 1970-களில் சத்தியநாராயணா பிரதர்ஸ்க்கு வீராணம் திட்டம் டெண்டர் வழங்கியது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் 80 பக்கங்கள் கொண்ட தனி அத்தியாயமே உள்ளது. அதில் டெண்டர் வேண்டுமென்றால் 2.5 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று முர்சொலி மாறன் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு கலைஞர் மீது மரியாதை உண்டு. அவரை மரியாதைக் குறைவாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளோம்.
ஆனால், ஊழல் ஆதாரம் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருக்கிறது. ஊழால் விஷயத்தில் திமுகவுக்கு எப்பவும் பதற்றம் உண்டு. ஆதாரத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு வெளியில் தேடுவார்கள். ஆதாரம் அவர்கள் அருகில் தான் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
அதேபோல் அமலாக்கத் துறை வெளியிட்ட 100 பக்க அறிக்கையில் பார்டி ஃபண்ட் பற்றியுள்ளது. அதன்படி, 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பார்ட்டி ஃபண்ட் வாங்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பயனாளர்கள் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்றுள்ளது.
திமுகவினர் மேடைகளில் “திமுக இருக்கும் இடத்தில் தவறு இருக்காது,” என்பார்கள். ஆனால், திமுக இருக்கும் இடத்தில்தான் தப்பு இருக்கும், தப்பு இருக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும். திமுகவினர் செய்யும் தவறை சரியாக, ஒழுங்காக விஞ்ஞான முறையில் செய்துள்ளனர்.
நான் இங்கே இரண்டு துறை ஃபைல்களை ஓபன் செய்ததற்கே இப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும்.
அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்குப் பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும், மக்களும் என்றும் விஜய் பக்கம் தான் இருப்பார்கள். அதேபோல் முதல்வருக்கு பதிலாக அமைச்சர்கள் பதிலளிப்பது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான்.
நாற்காலிக்காகவோ, அதிகாரத்துக்காகவோ நான் இந்த இடத்துக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.” என முதல்வர் விஜய் பேசினார்.















