இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களில் கடந்த 1-ம் தேதி முதல் செல்போன்களை எடுத்துச் செல்வ தற்கான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுன்ட்டர்கள் மற்றும் லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக அல்ல.
செல்போன்களை முறையாகப் பராமரித்து, மீண்டும் வழங்குவதற்கான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே இந்தக் கட்டணம் பெறப்படுகிறது.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில், தேவைக்கேற்ப கூடுதல் கவுன்ட்டர்களை அமைப்பது குறித்து அந்தந்த கோயில் நிர்வாகங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.















