ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. முதல் பிரம்மோற்சவ விழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
செப்டம்பர் மாத பிரம்மோற்சவத்திற்கு வரும் 8-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 14-ம் தேதி அங்குரார்பன நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 – 10 மணி, இரவு 7-9 வரை வாகன சேவைகள் நடைபெறும். 19-ம் தேதி கருட வாகன சேவை மட்டும் அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. 22-ம் தேதி தேர்த் திருவிழாவும், 23-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவும் பெறுகிறது.
இதில் வரும் 15-ம் தேதி மாலை ஆந்திர அரசு தரப்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணிக்கையாக வழங்க உள்ளார். இதையடுத்து, அக்.12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடத்தப்பட உள்ளது.
களை கட்டும் திருமலை
பிரம்மோற்சவ விழா நெருங்குவதை முன்னிட்டு, பல இடங்களில் தோரணங்கள், அலங்கார வளைவுகள் பொருத்தப்பட்டு வருகிறது. மாட வீதிகளில் ஜெர்மன் ஷெட்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோயில் முகப்பு கோபுரத்தில் மராமத்து பணிகளும், வெள்ளை அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.















