லார்ட்ஸ் போட்டியின் இடையே ஒளிபரப்பான இம்ரான் கான் மகன்களின் பேட்டி: களமாட மறுத்த பாகிஸ்தான்

0
21

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இடையே பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மகன்களில் நேர்காணல் ஒளிபரப்பானது. இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமாட மறுத்ததாக தகவல் வெளியானது.

பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

இம்ரான் கான் மகன்களின் நேர்காணல் ஒளிபரப்பு

இந்தப் போட்டியின் மதிய உணவு நேர இடைவேளையின் போது சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் மகன்களான காசிம் மற்றும் சுலைமான் கானின் நேர்காணல் ஒளிபரப்பானது. இந்த நேர்காணலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் மேற்கொண்டார்.

இந்த நேர்காணல் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போட்டியின் இடையே ஒளிபரப்பானது. ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இதை ஒளிபரப்பியது. அதில் தங்கள் தந்தையின் உடல்நிலை குறித்து அவர்கள் இருவரும் தங்களது கவலையை வெளிப்படுத்தி இருந்தனர். சுமார் 18 நிமிடங்கள் கொண்ட இந்த நேர்காணல் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் எடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி எதிர்ப்பு

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், விளையாட்டு போட்டியின் நேரலை ஒளிபரப்பில் அரசியல் பின்னணி கொண்ட கருத்துகளை ஒளிபரப்பு செய்யக் கூடாது என பாகிஸ்தான் அணி தெரிவித்தது. இதோடு தங்கள் அணி வீரர்கள் களமாட மாட்டார்கள் என்று தெரிவித்தது. இருப்பினும் மதிய இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் அணியினர் விளையாடினர்.

இந்த சூழலில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த நேர்காணல் பாகிஸ்தான் நாட்டில் ஒளிபரப்பாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இம்ரான் கான்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, இம்ரானை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதோடு அவரது குடும்பத்தினர் அவரை வாரந்தோறும் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இம்ரான் கானுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசை சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 21 முன்னாள் கேப்டன்கள் வலியுறுத்தி இருந்தனர். இதில் இம்ரான் மகன்களை நேர்காணல் கண்ட மைக் ஆதர்டனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here