இரண்டு நாட்களுக்குள் முடிந்த மெக்கே டெஸ்ட்: ஆடுகளம் குறித்து கவாஸ்கர் கேள்வி

0
22

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்தது. இந்நிலையில், போட்டி நடைபெற்ற மெக்கே ஆடுகளம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஆக, ஆஸ்திரேலியாவில் இரண்டு நாட்களுக்குள் மற்றுமோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முடிவு எட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் நான்காவது முறையாக அங்கு இது நடந்துள்ளது. இந்த மாதிரியான முடிவுகளை தரும் பந்துகள் பவுன்ஸ் ஆகும் ஆடுகளம் குறித்த விமர்சனங்கள் எதுவும் இன்னும் வரவில்லை.

ஆனால், அதற்கான சாக்குகள் வேக வேகமாக வருவது வாடிக்கை. ‘வானிலை அறிக்கையின் படி ஆடுகள பராமரிப்பாளர் பச்சை புற்களை அதிகம் விட்டது பந்து பவுன்ஸ் ஆக காரணம்’, ‘ஆடுகளத்தில் எந்த குறையும் இல்லை. பேட்ஸ்மேன்கள் பவுன்ஸ் ஆகும் பந்தை ஆடும் டெக்னிக்கில் குறை’ என்றெல்லாம் சொல்வார்கள். இதில் உள்ளூர் அணி சிறப்பாக பேட் செய்தால் இரண்டாவது காரணம் ஏற்றுக் கொள்ளப்படும்.

நிச்சயம் மெக்கே ஆடுகள தயாரிப்பு எந்தவித சர்பிரைஸும் எனக்கு தரவில்லை. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, வங்கதேச அணியிடம் தோல்வி கண்டது. அதனால் பவுன்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் வகையில் மெக்கே ஆடுகளம் அமைக்கப்பட்டது. ஆனால், இதில் தங்கள் பங்கு எதுவும் இல்லை என்றும், ஆடுகள பராமரிப்பாளர் அதை தன்னிச்சையாக செய்தார் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவிக்கும்.

ஆனால், என்ன நடந்திருக்கும் என்று அனைவரும் அறிவோம். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சொந்த மண்ணில் தங்கள் அணியின் பலத்தை அறிந்து வெளிப்படைத்தன்மை உடன் அதற்கு தகுந்த ஆடுகளம் வேண்டும் என்கிறது. ஆனால், ஆதிக்கம் செலுத்திய அணிகள் இப்படி செய்வதில்லை. இருப்பினும் எப்படியோ பேசி அதை வாங்குவார்கள்.

23 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் இரண்டாவது டெஸ்ட் தொடரில் ஆடியுள்ளது வங்கதேசம். இந்திய கிரிக்கெட் அணியும் இத்தகைய நிலையை அங்கு எதிர்கொண்டுள்ளது. ஆனால், ஒளிபரப்பு சார்ந்த வருவாய் காரணமாக இந்திய அணி, நான்கு ஆண்டுகால இடைவெளியில் இரண்டு முறை இப்போது அங்கு பயணிக்கிறது.

நிச்சயம் மெக்கே ஆடுகளம் குறித்து கள நடுவர் அளிக்கும் அறிக்கை மற்றும் ரேட்டிங் சுவராஸ்யமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் ஆட்டம் மூன்று நாட்களில் முடிந்தால் ஆடுகளங்கள் குறித்த அவதூறான அறிக்கைகள், மறைமுகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். இத்தகைய இரட்டை நிலைப்பாடு என்னை அதிசயிக்க வைக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் எப்படி ஆடுகிறார் என்று மட்டுமே அவர்கள் எடைபோடுகின்றனர். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அதே பேட்ஸ்மேனின் ஃபுட் வொர்க் குறித்து யாரும் பேசுவதில்லை.

நான் ஏற்கெனவே சொன்னது போல நிச்சயம் மெக்கே ஆடுகளம் குறித்த நடுவரின் அறிக்கை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை சங்கடம் கொள்ள செய்யாது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மெக்கே டெஸ்ட்

மெக்கேவில் உள்ள கிரேட் பேரியர்ஸ் ரீஃப் மைதானத்​தில் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கிய வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்த ஆட்டத்தில் வெறும் ஒன்றரை நாட்களில் 30 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மொத்தமாக 369 ரன்கள் மட்டுமே இரண்டு அணிகளும் இணைந்து பதிவு செய்தன. மொத்தம் 750 பந்துகள் இதில் வீசப்பட்டன. வழக்கமாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்தால் அது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கேள்வி எழுப்புவது உண்டு. இத்தகைய சூழலில் கவாஸ்கர் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here