நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் நோக்கில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஓராண்டுக்கு சோதனைகளை நடத்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு நாடு தழுவிய 24 சிறப்புப் பதினைந்து நாள் அதிரடி நடவடிக்கைகளுக்கான கால அட்டவணையை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன.
முதற்கட்டமாக, போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து நாடுகடத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள போதைப்பொருள் குற்றவாளிகளைக் கைது செய்யும் 15 நாள் தீவிர இயக்கம் நடைபெறும்.
அக்டோபர் மாதம் முதல், மருந்தகங்களில் மருத்துவப் பொருட்கள் போதைப்பொருள் தயாரிப்புக்கு திசைமாற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர ஆய்வு நடத்துவர். தொடர்ந்து, தலைமறைவு குற்றவாளிகள் மீது முழு விவரக் கோப்புகள் தயாரித்தல் மற்றும் கடலோர மக்களிடையே கடல்வழி போதைப்பொருள் வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
டிசம்பர் இரண்டாம் பாதியில், நாட்டின் அனைத்து தரை, கடல் மற்றும் விமான நிலையங்களின் சோதனைச் சாவடிகளில் ஒருங்கிணைந்த தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படும். 2027 ஜனவரி இரண்டாம் பாதியில் சட்டவிரோதப் பயிர்ச் சாகுபடிகளைக் கண்டறிந்து அழிக்கும் பணியும், பிப்ரவரி முதல் பாதியில் மூலப்பொருள் ரசாயனங்கள் திசைமாறாமல் தடுக்க ரசாயனத் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு இயக்கமும், பிப்ரவரி இரண்டாம் பாதியில் சிறைச்சாலைகளில் கூட்டு ஆய்வுகளும் நடைபெறும்.
இந்த ஒருங்கிணைந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும். அத்துடன் ‘தேசிய போதைப்பொருள் தடுப்பு தொலைநோக்கு ஆவணம் 2026-29’-ன் கீழ் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்குத் துணையாக அமைந்து, ‘போதையில்லா பாரதம்’ இலக்கை அடைய பெரிதும் உதவும் என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.















