டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் பெட்ரோலியம் டீலர்கள் மீது மேற்கொள்ளப்படும் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அச்சங்கத் தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தினசரி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் கொள்கைளுக்கு ஆதரவாக டீலர்கள் கூகுள் பே, போன்பே, பேடிஎம், யுபிஐ மற்றும் கிரெடிட்-டெபிட் கார்டுகள் போன்ற டிஜிட்டல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தினர்.
இதன்விளைவாக, பல விற்பனை நிலையங்களில் பெறப்படும் மொத்தப் பரிவர்த்தனைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை டிஜிட்டல் முறையிலேயே நடைபெறுகின்றன. தினசரி 200 முதல் 500 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பதிவாகின்றன.
எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களின் பின்னணி, அடையாளச் சான்று அல்லது அவர்கள் பயன்படுத்தும் பணத்தின் ஆதாரத்தை ஆராயும் நடைமுறைச் சாத்தியமோ அல்லது வசதியோ டீலர்களுக்கு கிடையாது.
அப்பணம் வங்கியின் பணப்பரிவர்த்தனை அமைப்பில் எவ்வாறு நகர்கிறது என்பதன் மீது டீலர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அரசின் கொள்களைக்கு முழுமையாக உட்பட்டுச் செயல்பட்ட போதிலும், டீலர்கள் கடுமையான வணிக முடக்கத்தையும் தனிப்பட்ட முறையில் துயரங்களையும் சந்தித்து வருகின்றனர்.
பணம் முடக்கம்
சைபர் கிரைம் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி, டீலர்களின் கணக்குகளில் உள்ள தொகையின் மீது லியன் குறியீடு வைப்பது அல்லது வணிகத்தை நடத்தும் முழு வங்கிக் கணக்கையும் முடக்குவது போன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபடுகின்றன.
சில நிகழ்வுகளில், விசாரணை என்ற பெயரில் டீலர்களை அவர்களின் வீடுகளில் இருந்து அதிகாலை நேரத்தில் காவல்துறையினர் அழைத்து சென்று, குறிப்பிட்ட பரிவர்த்தனை பற்றிய எந்தத் தகவலும் வழங்காமல் பல மணி நேரம் காவல் நிலையங்களில் வைப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இத்தகைய வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகள், சட்டம் காக்கும் வணிக உரிமையாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும், நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கியதற்காகவே டீலர்கள் தொடர்ந்து அலைக்கழிப்புகளையும், தன்னிச்சையான கணக்கு முடக்கத்தையும், காவல் நிலையத்தில் போலீஸாரை சந்திக்க நேரிட்டால், அனைத்து டிஜிட்டல் செலுத்துதல் முறைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து சங்கம் பரிசீலிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
எனவே, காவல்துறை சைபர் கிரைம் அதிகாரிகள், வங்கி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு ஆகியவை உடனடியாக தலையிட்டு தெளிவாக வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.















