உக்ரைன் கடல் பகுதியில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
‘எம்.வி.கோல்டன் லியோ’ என்ற வணிகக் கப்பல் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 மாலுமிகளுடன் சோளம் ஏற்றிக் கொண்டு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தக் கப்பலில் இருந்த 4 இந்திய மாலுமிகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை உறுதி செய்துள்ள இந்திய அரசு, பலத்த காயமடைந்த மற்றொரு இந்திய மாலுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் வரவழைத்து தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உக்ரைனில் உள்ள நமது இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது” என கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாாவின் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டுவைச் சேர்ந்த அகில் ஜோயன் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மெர்ச்சன்ட் நேவி அதிகாரியான இவர், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்து நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, மீண்டும் பணியில் இணைந்துள்ளார். இவரது மரணச் செய்தியைக் கேட்ட குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.















