சென்னையில் நடந்த மறைமலை அடிகள் பிறந்தநாள் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாட்டில் மக்களுக்கு கல்வியும், அறிவியலும் அவரவர் தாய்மொழியில் கிடைத்தால் அந்த நாடு செல்வ வளர்ச்சியில் எளிதாக முன்னேறும் என தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத்துறை, தமிழ் மொழித்துறை மற்றும் தமிழ் இலக்கியத்துறை சார்பில், மறைமலை அடிகளின் 150-வது பிறந்தநாள் விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ம.ராசேந்திரன் தலைமையில் நடந்த விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது, அவர் பேசியதாவது: மறைமலையடிகள் சித்தாந்தத்திலும் கரை கண்டவர். திருமுறைகளிலும் கரை கண்டவர்.
இரண்டையுமே முன்னெடுத்து சென்றவர். குறிப்பாக, தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் பெரும் தொண்டு எண்ணிலடங்காது. திருவாசகம் நம் உயிரோடு, உடலோடு கலந்தது.
ஒரு மொழியால் அறிவை பெறலாம். ஒரு மொழியால் ஞானத்தை பெறலாம். ஒரு மொழியால் வீடுபேற்றை அடைய முடியுமா என்பதை இந்த மண்ணில் நிரூபித்து காட்டியது திருவாசகம். அப்படிப்பட்ட திருவாசகத்துக்கு 1,300 பக்கங்கள் கொண்ட அற்புதமான, ஆழமான விரிவுரை வழங்கியவர் மறைமலை அடிகள்.
மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாறு அற்புதமானது. இளைய தலைமுறை அதை தெரிந்து கொள்ள வேண்டும். மனித குலத்துக்கு வரும் துன்பங்களை எது இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ அதற்கு பெயர்தான் அறிவு.
மக்கள் பேசும், எழுதும் மொழியில் கல்வி, அறிவியல் பரப்பப்படும்போது அந்த நாடு செல்வ வளர்ச்சியில் எளிதாக முன்னேறும். அதேவேளையில் அறிவியலும், தொழில்நுட்பமும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும். அதற்கு தாய்மொழி வழிக் கல்வியும், அறிவியலும் தேவைப்படுகிறது. இதை 130 ஆண்டுகளுக்கு முன்பே மறைமலையடிகள் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ம.ராசேந்திரன் பேசுகையில், “நெய்தல் நிலப் பகுதியில் பிறந்திருந்தாலும், மொழிக் கலப்பில்லாமல் தனித்தமிழை காத்து நின்றவர் மறைமலையடிகள்.
ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் ஒட்டுமொத்த சங்க இலக்கியங்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பேராற்றல் பெற்றவர். மறைமலை அடிகளின் சென்னை பல்லாவரம் வீட்டிலும், அவரது வரலாற்று நூலிலும் இலங்கை தமிழர்களின் பங்களிப்பு உண்டு. இதற்காக தான் கடனாக பெற்ற தொகையை மறைமலையடிகள் ஓராண்டில் திரும்ப அடைத்திருக்கிறார்”என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், இலங்கை எம்பி க.ச.குகதாசன், ஓய்வுபெற்ற மாநில தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், சென்னை பல்கலை. துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஆம்ஸ்ட்ராங், பதிவாளர் ரீட்டா ஜான், சைவ சித்தாந்தத்துறை தலைவர் சா.சரவணன், தமிழ் மொழித்துறை தலைவர் வாணி அறிவாளன், தமிழ் இலக்கியத்துறை தலைவர் வே.நிர்லமர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.















